search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வேன் மணல் லாரி மோதல்"

    திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வேன்-மணல் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை அவர்கள் வேனில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர் சிறுமிகள் என 17 பேர் பயணம் செய்தனர். தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஜான் (வயது 24) வேனை ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.

    வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×